×

பிரதமர் மோடிக்கு அஞ்சுகிறாரா ஜி ஜிங் பிங்?.. எல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் உரையை நீக்கியது சீன சமூக ஊடகம்

பெய்ஜிங்: பிரதமர் மோடியின் எல்லை பிரச்சினை தொடர்பான உரையை சீன சமூக ஊடகம் நீக்கி உள்ளது. இந்தியா- சீனா எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது. மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியா- சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த கருத்துக்கள், சீன சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சீனாவில் வெய்போ மற்றும் வி-சாட் ஆகிய செயலிகள் பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை சீனாவின் பிரபல சமூக ஊடக செயலியான வி-சாட் நீக்கியுள்ளது. இதுகுறித்து அந்த சமூக ஊடகம் சார்பில் கூறுகையில்; அரசு ரகசியங்களை தெரிவிக்கக்கூடாது. தேச பாதுகாப்புக்கு ஆபத்து நேர விடக்கூடாது என்ற காரணத்தால் இந்த பதிவுகளை நீக்கி உள்ளோம் என கூறியுள்ளது.

முன்னதாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியான இந்திய - சீன எல்லை நிலவரம் பற்றிய மோடியின் கருத்துகள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இடையே நடைபெற்ற தொலைபேசி வழி உரையாடல், வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரின் அறிக்கை போன்றவை வி-சாட் சமூக ஊடகம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,speech ,Chinese ,Ji Jing Ping , PM Modi, Ji Jing Bing, border issue, PM Modi's speech, Chinese social media
× RELATED மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு:...